நிலவில் சந்திரயான்-3 கால் பதித்து ஓராண்டு நிறைவு: இன்று தேசிய விண்வெளி தினம்

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் ஏவியது.

40 நாட்கள் அது விண்வெளியில் பயணித்து, சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது.

பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் நிலவை ஆய்வு செய்த அந்த நாள், இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

அதை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் ஆக.,23 தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இன்று முதலாம் தேசிய விண்வெளி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஓராண்டு நிறைவுயையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை இந்திய விண்வெளித் துறையின் ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் சந்திரயான் 3, அங்கு 'மாக்மா' கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. மாக்மா என்பது உருகும் பாறையின் பெரிய அடுக்குகள் ஆகும்.

மாக்மா கடல் 4.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம். பொதுவாக கோள்கள் உருவாகும் போது இவை காணப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நிலவின் மேற்பகுதி கரடுமுரடான பாறைகளால் உருவாகி இருந்தாலும், சில இடங்களில் திரவம் போன்ற பொருள் மேற்பரப்பில் மிதந்து சென்றதற்கான வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி 50 மீட்டர் வரை மென்மையான மேற்பரப்புகள் உள்ளன. அந்த பகுதிகளில் பள்ளங்கள், பாறைகள் என ஏதும் இல்லை போன்ற தகவல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.