சரும பாதுகாப்பில் அற்புதம் செய்யும் ஆவாரம் பூ..!

ஆவாரம் செடியின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. சித்த மருத்துவத்தில் முக்கிய இடம்பிடித்துள்ள ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் ஏராளம். இதில் ஒன்று சரும ஆரோக்கியமாகும்.

ஒரு கை பிடியளவு ஆவாரம்பூவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விடாமல் அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சுண்ட காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால், வழுக்கை நீங்கி முடி வளர ஆரம்பிக்கும்.

ஆவாரம் பூவுடன் சின்னவெங்காயம், பாசிப் பருப்பு சேர்த்து வாரம் இருமுறை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், உடல் அழகு பெறும். புத்துணர்வுடன் இருக்கலாம்.

ஆவாரம் பூவுடன், பனங்கற்கண்டு, விலாமிச்சை வேர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெறும்.

ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து வந்தால், கூந்தல் உதிர்வுக்கு தீர்வு கிடைக்கும்.

ஒருசில பெண்களுக்கு முகத்தில் தேவையில்லாமல் முடிகள் வளரும். இதற்கு கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலாங்கிழங்கு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர, பளபளப்பாகும்.