15 கிலோ தங்கம், 18,000 வைரம், மரகதம் கொண்டு மிளிர்ந்த குழந்தை ராமர்

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமரின் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்களும் அனைவரின் கவனத்தை ஈர்த்தன.

பால ராமருக்கு கிரீடம், திலகம், 4 நெக்லஸ், ஒரு ஒட்டியாணம், ஒரு ஜோடி கைகாப்பு, 2 தண்டை, விஜய மாலை, 2 மோதிரம் என மொத்தம் 14 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.

லக்னோவை சேர்ந்த ஹர்சஹய்மால் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் 12 நாட்களில் இந்த ஆபரணங்களை தயாரித்து தந்தது.

இதில், 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடம் 1.7 கிலோ எடை கொண்டது.

விஜய மாலை 2 கிலோ எடை கொண்டது. ஒட்டியாணம் 750 கிராம் எடை கொண்ட தங்க ஆபரணம். இதில் 70 காரட் வைரங்கள், 850 காரட் ரூபி மற்றும் மரகத கற்கள் இடம் பெற்றுள்ளன.

பால ராமரின் நெற்றியில் இடப்பட்டுள்ள நாமம் 16 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டது.

கழுத்தை அலங்கரித்த நெக்லஸ் 500 கிராம் எடையுடன் 50 காரட் வைரங்கள், 150 காரட் ரூபி கற்கள், 380 காரட் மரகதங்களுடன் தயாரிக்கப்பட்டது.

பால ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற வேட்டி, சிவப்பு நிற அங்கவஸ்திரம் தூய தங்க 'ஜரிகை' கொண்டு பனாரஸ் பட்டால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.