இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடும் முன்...
மலச்சிக்கல், குமட்டல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் முதல் கர்ப்பத்தில் ஏதாவது இருந்து, தற்போது ஆரோக்கியமுடன் இருந்தால் 2வது குழந்தைக்கு திட்டமிடலாம்.
குறைபிரசவம், குழந்தை எடை குறைப்பு போன்ற பல குறைபாடுகள் ஏதாவது இருந்தாலும், டாக்டரின் ஆலோசனையுடன் அடுத்த குழந்தைக்கு திட்டமிட்டால், வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
முதல் குழந்தையின் வயது மிக குறைவாக இருந்தால், 2வது குழந்தையையும் கையாள்வது கடினமானதாக இருக்கும். எனவே, தம்பி அல்லது தங்கையை வரவேற்க, முதல் குழந்தையை தயார்ப்படுத்தவும்.
2வது குழந்தை குறித்து தம்பதியினர் ஒரே மாதிரி கருத்துக்களை கொண்டிருக்க வேண்டியதில்லை. எனவே, மற்றவரும் மனதளவில் தயாராக சிறிது கால அவகாசம் அளிப்பது அவசியமானது.
குழந்தை வளர்ப்பில் உங்களின் தற்போதைய நிதி நிலைமையை கட்டாயமாக கருத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் அறைகளும் குழந்தை வளர்ப்புக்கு போதுமானதாக இருக்க வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் புதிதாக பிறக்கும் குழந்தையை பராமரிப்பது கடினமானதாக இருக்கக்கூடும். இதற்கேற்ப சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
முதல் முறை மட்டுமின்றி இரண்டாவது முறையும் கருத்தரிக்க வயது முக்கியமான ஒன்றாகும்.
பெண்களுக்கு ஆண்டுதோறும் வயது அதிகரிக்கும்போது கருமுட்டைகளின் எண்ணிக்கை, தரம் குறையக்கூடும் என்பதால், கருச்சிதைவு, மரபணு குறைபாடுகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டால் உயிரணுக்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, இரு பாலினரும் 35 வயதுக்குள் குழந்தை பெற திட்டமிடலாம்.