குழந்தைகளை ஜிம்முக்கு அனுப்பலாமா?

'பிரான் ஜிம், ஜிம்னேசியம், பிரைன் யோகா' என்று குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளை குறிக்கும் சொற்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன.

இதற்கு காரணம், 'பிரீ பிளே' என்று சொல்லப்படும் குழந்தைகள் விருப்பம் போல் ஓடியாடி விளையாடுவது. தனியார் பள்ளிகளில், 40 சதவீதத்திற்கும் மேல் குறைந்திருப்பது, பல புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

எட்டு வயது வரைக்கும் விருப்பம் போல ஓடி விளையாடாத குழந்தையின் மூளை வளர்ச்சி, அறிவுத்திறன், அந்த வயதில் இயல்பாக எப்படி இருக்க வேண்டுமோ, அதை விடவும் குறைவாகவே இருக்கும்.

இது மட்டுமல்ல, 40 சதவீதம் குழந்தைகள் நம் நாட்டில் அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். குழந்தைகளின் அடிப்படை செயலான துறுதுறுவென்று இருப்பதே இல்லாமல் போய், ஓடுவதற்கு கூட விருப்பம் இருப்பதில்லை.

காரணம் தெரிந்தது தான், மொபைல் போன்ற மின் சாதனப் பொருட்கள். பல மணி நேரம் வகுப்பில் உட்கார்ந்தே இருக்கின்றனர். இது போதாது என்று, 6 வயது குழந்தைக்கு தினமும் ஆறு பக்கம் ஹோம் ஒர்க் தருகின்றனர்.

எட்டு வயது வரை பிரீ பிளே இல்லாமல் இருந்தால், 8 - 12 வயது வரை மைதானத்திற்கு அழைத்துச் செல்ல முடியாதபட்சத்தில், 'ஜிம்'மிற்கு அனுப்பலாம். ஜிம் என்றாலே வெயிட் துாக்குவது, அங்கிருக்கும் கருவிகளை பயன்படுத்துவது மட்டும் இல்லை.

தேர்வு செய்யும் ஜிம் வெறும் கருவிகளை சார்ந்ததாக இல்லாமல், அதிக திறந்தவெளி தரை தளம் உள்ள பந்து, டிரில்ஸ், லேடர், ஸ்டிக் டிரில்ஸ், புளோர் டிரில்ஸ், டிராம்பலின் டிரில்ஸ், பெரிய உடற்பயிற்சி பந்துகள், கூம்பு டிரில்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.

குழந்தைக்கு எதிலும் கவனம் இல்லை; கோபம் வருகிறது என்று யோகா வகுப்புகளுக்கு அனுப்புவது தான் பெற்றோர் செய்யும் தவறு.

குதிப்பது, ஓடுவது என்று இருக்கும் 12 வயது வரை உள்ள குழந்தையை நிதானமாக குனிந்து, நிமிர்ந்து யோகா செய்யச் சொன்னால் எப்படி செய்வர்?

இதனால், 90 சதவீதம் பலன் கிடைக்காது. வளைவு தன்மை வர வேண்டும் என்று விரும்பினால், 'ஜிம்னாஸ்டிக்' பயிற்சிக்கு அனுப்பலாம். நம் பாரம்பரிய விளையாட்டுகளான களரி, சிலம்பத்துடன் யோகா கற்றுத் தரலாம்.