நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிடலாமா?
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் வாழைப்பழம், மாம்பழம் சாப்பிடலாமா என பலத்த சந்தேகம் நிலவுகிறது.
அனைத்து பழங்களிலும் சர்க்கரைச்சத்து உள்ளது. வாழைக்காயில் சர்க்கரை குறைவு; ஆனால் வாழைப்பழத்தில் அதிகம்.
மாங்காயில் சர்க்கரை குறைவு; ஆனால், மாம்பழத்தில் அதிகம். காய், பழமாகும்போது அதன் சர்க்கரைச்சத்தும் அதிகரிக்கும்.
பழங்களை ஜூஸ் ஆக மாற்றும்போது அவற்றின் நார்ச்சத்தை இழக்கிறோம். சர்க்கரையே சேர்க்காவிட்டாலும் நார்ச்சத்து நீக்கப்பட்ட ஜூஸ் வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு சமம்.
எனவே, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் முடிந்தளவு எந்த பழத்தையும் ஜூஸாக குடிக்கக்கூடாது.
சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவுமுள்ள ஆப்பிள், கொய்யாக்காய், பப்பாளி, பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை தினம் ஒன்று என்ற அளவில் (பப்பாளி என்றால் 2 துண்டுகள்) எடுக்கலாம்.
ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இல்லாவிட்டால், பழங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.
அதேவேளையில் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துள்ளவர்களும் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மாம்பழ சீசனில் வேண்டுமானால், சாப்பிடும் 4 இட்லியில் இரண்டைக் குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக 2 துண்டு மாம்பழம் சாப்பிடலாம். ஆனால், குறிப்பிட்ட அளவை மீறக்கூடாது.