சம்மர் விடுமுறை நாட்களை குட்டீஸ்களுடன் கழிக்கலாமே?

கோடை விடுமுறை நாட்கள் என்பது குழந்தைகளுக்கு குதுாகலமாக இருந்தாலும், பெற்றோர் பலரும், 'அய்யய்யோ... நம்ம வீட்டு குட்டீஸ் நம்மள ஒருவழி ஆக்கிடுவாங்களே' என அச்சம் கொள்கின்றனர்.

குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம், வீடுதான். பெற்றோர்தான் முதன்மையான குரு; குழந்தைகளுடன் அவர்கள் நேரத்தை பகிர்ந்தால், பொழுதுபோய்விடும்; மகிழ்ச்சியாக இருப்பர்.

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரவும் இக்கால கட்டம் சிறந்தது. ஏனெனில், விடுமுறை என்பதால் வீட்டில்தான் அவர்கள் அதிக நேரமிருப்பர்.

நம்முடன்தான் உடனிருப்பர் என்பதால், பல பொழுதுபோக்கு விஷயங்களை சொல்லித்தர வாய்ப்பு உருவாகும். செடி, மரக்கன்றுகளை வைக்கவும், வளர்க்கவும் கற்றுத்தரலாம். பூக்களை பற்றி விளக்கம் தரலாம்.

வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கும். பாடப்புத்தகம் அல்லாத பிற கதை, நகைச்சுவை, சுவாரசிய தகவல் புத்தகங்களை வாசிக்க பழக்கலாம்.

ஆர்வமிருந்தால், செல்லபிராணி வளர்ப்பை ஊக்குவித்தால், நாய், பூனைகளிடம் குழந்தைகளுக்கு உள்ள பயம் நீங்கும்.

வீட்டில் சின்ன சின்ன வேலைகள், சமையல் செய்வதற்கு உதவி, வீடுகளை சுத்தம் செய்ய கற்றுத்தரலாம்.

நேரம் கிடைக்கும் போது பாட்டு பாடவும், நடனமாடவும் சொல்லித்தாருங்கள். உற்சாகத்தை அதிகமாக்குவதுடன் உடற்பயிற்சியாகவும் அமையும்.

பிடித்தமான விளையாட்டு அல்லது வேறு ஏதாவது பயிற்சி முகாமில் சேர்த்து, பெற்றோர்களும் அங்கு சென்று நேரத்தை அவர்களுக்காக செலவிடலாம் என்பது உளவியல் நிபுணர்களின் அட்வைஸாகும்.