பாதுகாக்கப்படாத குடிநீரால் கேன்சர் அபாயம்

வெயில் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், வாட்டர் கேன், வாட்டர் பாட்டில் விற்பனையும் அதிகரித்துள்ளது.

வாட்டர் கேன், பாட்டில் விற்பனை செய்வதிலும், நிறுவனங்கள் கட்டாயம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.

ஆனால், தரமற்ற கேன்களில் தண்ணீர் நிரப்பி உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல், பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

வாட்டர் கேன்களில் கட்டாயம், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயர், தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி, காலாவதி தேதி, எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு எண் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

நன்றாக மூடப்பட்டு தண்ணீர் 'லீக்' ஆகாமலிருக்க வேண்டும். குறிப்பாக, முழுவதும் மூடப்பட்ட வாகனங்களில் மட்டுமே, வாட்டர் கேன்களை கொண்டு செல்ல வேண்டும்.

திறந்த நிலையில் உள்ள வாகனங்களில் எடுத்து செல்வதால், பிளாஸ்டிக் கேன்களின் மீது வெயில் பட்டு, வேதியியல் மாற்றம் ஏற்படும்; தண்ணீரின் தரமும் மாறுபட வாய்ப்புள்ளது.

இந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால், புற்றுநோய் வரை வர வாய்ப்புள்ளது என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.