கெண்டைக்காலில் தசைப்பிடிப்பு வர காரணமும் சிகிச்சையும்!
கால் முட்டிக்கு கீழ், பின் பகுதியில் உள்ள தடிமனான கெண்டைக்கால் என்றழைக்கப்படும் பகுதியில், தசைகள் எதிர்பாராமல் இழுத்து பிடிக்கும்.
சில நேரங்களில் இரவில் உறங்கும் சமயத்தில் நரம்புகள் இழுப்பதால் இப்படி ஆகலாம். இயல்பாவதற்கு இரண்டு, மூன்று நிமிடங்கள் எடுக்கலாம்.
பொதுவாக, 40 வயதிற்கு மேல் தான் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு வரும்.
ஆனால், 12 வயது குழந்தைக்கு தசைப்பிடிப்பு இருந்தால், அதற்கு பிரதான காரணம், நீர்ச்சத்து குறைபாடாக இருக்கலாம்.
இது தவிர, வயிற்றுப் போக்கு பிரச்னை, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப் போக்கு என்று அதிக நீர், ரத்த இழப்பு இருந்தால், கெண்டைக்கால் தசைப்பிடிப்பு வரும்.
கர்ப்ப காலத்தில் அதிக வாந்தி எடுப்பது, அதிக உடல் எடை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது ஆகியவையும் இதற்கு காரணமாக அமையலாம்.
இவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் கால்களை நீட்டி மடக்குவது, உட்கார்ந்த நிலையில் கால்களை முன்பக்கமாக நீட்டி பாதங்களை, வட்ட வடிவில் சுற்றுவது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
உடல் பருமனாக இருந்தால் கால்களை மடக்கி நீட்டும் போதே, தசைகள் பிடித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்; இவர்கள் நிதானமாக பயிற்சி செய்யலாம்.