குழந்தை திருமணம்...பாதிக்கப்படும் சிறுமியரில் 3ல் ஒருவர் இந்தியர்!

நம் நாட்டில், திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், குழந்தை திருமணம் பெருமளவு தடுக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் ஆங்காங்கே தொடர்கிறது.

குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நோக்கில், 2024ல் மத்திய அரசு 'குழந்தை திருமணமில்லா இந்தியா' இயக்கத்தை துவங்கியது. வரும் 2030க்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இச்சூழலில் ஐக்கிய நாடுகளின் 'யுனிசெப்' அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், குழந்தை திருமணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியாவில், 17 வயது பூர்த்தியடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட சிறுமியரின் எண்ணிக்கை, 22 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இவர்களில், 9 கோடிக்கும் அதிகமானோர், 15 வயதை அடைவதற்கு முன்பே கட்டாய திருமணத்தில் தள்ளப்படுகின்றனர்.

உலகளவில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில், மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார்.

இந்தியாவில் குழந்தை திருமணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம், பீஹார், மே.வங்கம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் அரங்கேறுகின்றன.

கேரளா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சிறப்பாகவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குழந்தைத் திருமணம் ஒரு சிறுமியின் கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலத்தை பாதிப்பதுடன், அவரின் வாழ்வுரிமையையும் பறிக்கிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.