விரைவில் வெளியாகிறது சிப் பதிக்கப்பட்ட இ-பாஸ்போர்ட்

'பாஸ்போர்ட் சேவை - 2.0' எனும் திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் துவங்கியது. இதன் மாதிரி திட்டம் சென்னை உட்பட, 12 நகரங்களில் முதலில் அமலுக்கு வந்தது.

கடந்த 6 மாதங்களில் இதன் கீழ் உள்நாட்டில், 80 லட்சம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இந்திய துாதரகங்கள் வாயிலாக, 60,000 மின்னணு பாஸ்போர்ட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைவருக்கும் மின்னணு பாஸ்போர்ட் வழங்கும் பணியை வெளியுறவு அமைச்சகம் விரைவுபடுத்தியுள்ளது.

அதன்படி இனி வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட், காகிதம் மற்றும் மின்னணு என ஒருங்கிணைந்திருக்கும். இதில், ரேடியோ அலை அடையாள சிப் மற்றும் 'ஆன்டெனா' பொருத்தப்பட்டிருக்கும்.

பாஸ்போர்ட்டின் முன் அட்டையின் கீழ் பகுதியில் முகப்பில் தங்க நிற குறியீடு அடையாளப்படுத்தபட்டு இருக்கும்.

அதே போல் உட்புற அட்டையின் வடிவமைப்பையும் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல் எளிதில் அச்சிட முடியாதது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்து உருவாக்கியுள்ளனர்.

பழைய போஸ்போர்ட் வைத்திருப்போர் அதன் காலாவதி காலம் வரை அதை பயன்படுத்தலாம். அதன் பின் மின்னணு பாஸ்போர்ட் வழங்கப்படும்.

2035க்குள் நாட்டிலுள்ள அனைத்து பாஸ்போர்ட்களையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள் இதோ... முன் பகுதியில் ரேடியோ அலை அடையாள சிப், பயணியரின் கைரேகை, முகம் உள்ளிட்ட, 'பயோமெட்ரிக்' தகவல்களை ரகசிய குறியீட்டுடன் சேமித்து வைத்திருக்கும்.

இமிகேரஷன் கவுன்டர்களில் இதை டெபிட், கிரெடிட் கார்டுகளை போல ஸ்கேன் செய்தால் போதும், ஆவணச் சரிபார்ப்பு மிக வேகமாக முடியும். வரிசையில் காத்திருக்கும் நேரம் குறையும்.

சிப்பில் டிஜிட்டல் கையொப்பத்துடன் தகவல்கள் இருக்கும். அதை திருத்தவோ, போலி பாஸ்போர்ட்களை உருவாக்கவோ முடியாது.

இவை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு ஒத்துப் போகின்றன. எனவே சர்வதேச விமான நிலையங்களில் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படும்.