பல் சொத்தையை ஏற்படுத்தும் காபி, பீட்சா, பர்கர் !

காலையில் எழுந்ததும், 90 சதவீதம் பேருக்கு, சர்க்கரை கலந்த காபி, டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. அதிலும், பலரும் ஒரு டம்ளர் காபிக்கு இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிப்பர்.

உணவுப் பழக்கம் முன்பு போல நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் என்று சமைக்காமல், இயற்கையாக சாப்பிடுவதும் கிடையாது. எல்லாமே சமைத்த உணவுகள் தான்.

இதுதவிர, நுாடுல்ஸ், பீட்சா மற்றும் பர்கர் என சுத்திகரிக்கப்பட்ட, அதிக சர்க்கரை உள்ள உணவுகளையே பலரும் சாப்பிடுகிறோம்.

நாள் முழுதும் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, இரவில் பல் துலக்காமல் படுக்கும் போது, உணவுத் துகள்கள் பற்களின் மேல் படிகின்றன.

இப்படியே நீண்ட நாட்களுக்கு படிந்து இருந்தால், ஈறுகள் பலவீனமாகி, அழுத்தம் ஏற்பட்டு, வீங்க ஆரம்பிக்கும்.

பல்வலி, வாயில் ஏதாவது பிரச்னை வந்தால் மட்டுமே பல் டாக்டரிடம் செல்கிறோம். அப்படி இல்லாமல், 6 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால், சொத்தை இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும்; எளிதாக அடைக்கலாம்.

தாமதித்தால் பாதி பல் தான் இருக்கும். அதன்பின், 'ரூட் கேனால்' செய்ய வேண்டும். சில சமயங்களில் பல்லை எடுக்க வேண்டிய நிலையும் வரலாம்.

சர்க்கரையை தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் கடித்து, சுவைத்து சாப்பிட்டால், வாயில் நிறைய உமிழ்நீர் சுரக்கும். இது, பற்களின் மேல் அழுக்கு சேர விடாமல் பார்த்துக் கொள்ளும்.

ஐந்து வயதிலிருந்து இரண்டு முறை பல் துலக்க பழகினால் தான், வாழ்நாள் முழுதும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.