சமையலை சுவையாக்க ஈஸி ட்ரிக்ஸ்...

ஆப்பம் செய்ய மாவு அரைக்கும்போது அதில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.

இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது, சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்

வீட்டில் எப்போதும் அவல் வைத்திருந்தால், திடீர் விருந்தினர் வரும்போது உடனே அவல் புட்டு, கேசரி, எலுமிச்சம் அவல், புளி அவல், மிளகு அவல், போன்ற ஏதாவது ஒன்றை செய்து அசத்தலாம்.

எலுமிச்சை சாதத்தில் வறுத்த நிலக்கடலையை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

கிரேவி வகைகளை செய்யும்போது அதில் கொத்தமல்லி இலைகளை துாவினால் மணமும், சுவையும் கூடும்.

பருப்பு, பயிர் வகைகளை வேக வைக்கும்போது குக்கரை பயன்படுத்துவது சிறப்பு. அப்போது, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.

ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

பீன்சை வைத்து கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும்.

பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.