கோடையை குளிர்விக்கும் மூலிகை திருநீற்றுப்பச்சிலை!

திருநீற்றுப் பச்சிலை, பார்ப்பதற்கு, பச்சை நிறத்தில், நல்ல மணத்துடன் இருக்கும். நல்ல குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த மூலிகைக்கு, விபூதி பச்சிலை, சப்ஜா என, பல பெயர்கள் உண்டு.

கோடையில் பலருக்கும் சிறுநீர் பிரிவதில் பிரச்னை இருக்கும். அத்துடன் நீர்க்கடுப்பு, சிறுநீர் பிரியாமை போன்ற பல தொந்தரவுகளுக்கு, திருநீற்றுப் பச்சிலை டீ குணமளிக்கும்.

இதன் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தி வர, கோடை வெப்பத்தினால் வரும் பிரச்னைகள் தீரும்.

இந்த இலைகளை வாயில் போட்டு மென்றால், வாயில் காணப்படும் சூடு குறையும். இந்த மூலிகை சாறுடன், தேன் கலந்து பருக, வாயு பிரச்னை தீரும்.

தலைவலி, துாக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு, இதன் இலைகளை நுகர்ந்தால், தீர்வு கிடைக்கும்.

குறிப்பாக இரவில் துாங்கச் செல்லும் முன், இந்த இலைகளை சிறிது நேரம் நுகர்ந்தால், நல்ல துாக்கம் வரும்.

தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன், இந்த மூலிகையை சேர்த்து, தலைக்கு தேய்த்து வர கண்ணில் இருக்கும் சூடு, தலை உஷ்ணம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.