வரலாற்றில் இன்று: 1648ல் டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது

தாஜ்மஹாலைப் போல், புகழ் பெற்ற டில்லி செங்கோட்டையைக் கட்டியவரும் முகலாய மன்னர் ஷாஜகான்தான்.

1639, மே 12ல் செங்கோட்டை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி 1648, மே 13ல் முடிக்கப்பட்டது. ஆம் இதை கட்டி முடிக்க சுமார் 9 ஆண்டுகள் பிடித்தன.

செங்கோட்டை என பெயர் வர முக்கிய காரணம், இது முழுக்க சிவப்பு நிறக் கற்களாலேயே கட்டிமுடிக்கப்பட்டதால் தான்.

சுமார் 245 ஏக்கருக்கு பரந்து விரிந்திருக்கும் செங்கோட்டையின் மதில் சுவர்கள் சுமார் 2.41 கி.மீ சுற்றளவுக்கு நீண்டிருக்கின்றன. மேலும் இதற்கு லாகூர் கேட், டில்லி கேட் என இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.

ஷாஜகானுக்குப் பின்னர் அவரின் மகன் ஔரங்கசீப் காலகட்டத்தின்போது முக்கிய நுழைவுவாயில்களுக்கு முன்பு 10.5 மீட்டர் உயரம்கொண்ட பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன.

1857ல் டில்லியின் கடைசி முகலாய மன்னர் பகதுர் ஷா ஜாபருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதலுக்கு பின் பிரிட்டிஷார்கள் ஆளுகைக்குள் வந்தது.

அதன் பின்னர் 1947, ஆகஸ்ட் 15ல் தேதி செங்கோட்டை சுதந்திர இந்தியா வசம் வந்தடைந்தது. முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இங்கு மூவர்ணக்கொடியைப் பறக்கவிட்டார்.

மேலும் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாளன்று, இந்திய பிரதமர்கள் இங்கு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்கள்.

2003 டிசம்பரில் செங்கோட்டையை இந்திய சுற்றுலாத்துறையிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது. தொல்லியல் அருங்காட்சியகம், இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன.