நீரிழிவு பாதிப்புக்கு... மனப்போராட்டமும் காரணம் !

நீரிழிவால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகிறனர். உலகளவில், பல கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் நிலையில், இயற்கை மற்றும் முழுமையான சிகிச்சை வழிகள் குறித்து விழிப்புணர்வு பெறுவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதுகுறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் தான், ஆண்டுதோறும், நவ. 14ல் உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'நீரிழிவு நோயாளிகளும் நல வாழ்வும்' என்பது, இந்தாண்டின் மையக் கருத்தாகும்.

நீரிழிவு பாதிப்பு என்பது உடல் பிரச்னை சார்ந்தது மட்டுமின்றி, மனநிலையுடனும் தொடர்புடையதாகும்.

மனப் போராட்டம், நீண்ட கால மன அழுத்தம், வாழ்வியல் சூழலில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவை உடல் ஹார்மோன் சமநிலையை பாதித்து, நீரிழிவை துாண்டுகிறது.

மன அழுத்தம் காரணமாக உடலில் 'கார்டிசோல்' போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்து, இன்சுலின் செயல்பாடு குறைகிறது; இதனால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.

நீரிழிவை தொடர்ந்து உடல் பலவீனம், சிறுநீர் தொற்று, பாதம், கால்களில் உணர்விழப்பு, பாத எரிச்சல், புண்கள் ஆறாமை, கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.