மழை நீரை அருந்துவது ஆரோக்கியமானதா?

இயற்கையோடு ஒன்றி வாழ்கிறேன் என சிலர் மழை நீரைக் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

மழைநீரை குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என நம்புகின்றனர். ஆனால் சரிவர வடிகட்டி, காய்ச்சி குடிக்காவிட்டால் நோய் பரவும் அபாயமுள்ளது.

குறிப்பாக, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மழை நீரில் அமிலத்தன்மை அதிகம். எனவே அதனை முறையாக சேகரித்து பயன்படுத்த வேண்டும்.

மழைநீரில் பிரத்தியேகமான தனிமங்களோ, தாதுக்களோ இல்லை. ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் பெய்யும் மழை நீரானது வேறுபடும்.

உதாரணத்துக்கு, மலைப் பிரதேசங்களிலும் காற்று மாசு நிறைந்த பகுதிகளிலும் பெய்யும் மழை நீர் அவற்றின் தரத்தில் வேறுபடும்.

அந்த மழை நீரின் தரத்தினையும் அதனைச் சேமித்து வைக்கும் பாத்திரத்தையும் வைத்து அதனை ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை குடிக்கலாம்.

தூய்மையான பகுதியிலுள்ள மழை நீரை சேகரித்து குடிக்கலாம்; அனல் மின் நிலையம் போன்றவை இருந்தால், அங்கு பெய்யும் மழைநீரில் காற்றிலுள்ள நச்சுத் துகள்கள் கலந்திருக்கும்.

புயல், வெள்ளம் போன்ற காலங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத பட்சத்தில் மழை நீரை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நேரடியாக தராமல், வடிகட்டி, காய்ச்சி குடிப்பதே சிறந்த வழி.

இல்லாவிட்டால், அதில் பூஞ்சைகள் வளரக்கூடும். எனவே பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று, மஞ்சள் காமாலை, காய்ச்சல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.