60 வயதில் ஏற்படும் தசை இழப்பு எனப்படும் சார்க்கோபீனியா!
பொதுவாகவே, வயதாக வயதாக நமது உடலின் தசை மண்டலமும், எலும்பு மண்டலமும் வலுவிழக்கும். முதியோருக்கு சார்க்கோபீனியா எனப்படும் தசை பலவீனமும் ஏற்படும்.
வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். 60 வயதில், 30 வயதில் இருந்த தசையின் அளவும்; செயல் திறனும் பாதியாக குறையும் வாய்ப்பு உள்ளது.
இதனால், நடையின் வேகம் குறையும்; கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது; விரல்களின் பிடிமானம் தளர்ந்து போகலாம்.
எலும்பு, தசை, கொழுப்பு மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. தசை குறையும் போது, அந்த இடத்தில் இழந்த தசைக்கு பதில் கொழுப்பு சேர்ந்து, வேலை செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது.
சமநிலை அதாவது, 'பேலன்ஸ்' செய்ய முடியாமல் தடுமாறி விழும் வாய்ப்பும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் உண்டு.
வயது ஏற ஏற சோம்பேறித்தனமாக இருப்பதால், மேலும் தசை அளவும், செயல் திறனும் குறையும். எதையுமே பயன்படுத்தாமல் இருந்தால் அதை இழக்க நேரிடும். தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது.
சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம். நடைபயிற்சி, உடற்பயிற்சி, ஜாகிங், படி ஏறுதல், டான்ஸ், நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும்.
மேலும் தினசரி உணவில் 40 - 50 கிராம் புரதம், வைட்டமின் டி மாத்திரை எடுப்பதோடு, சூரிய ஒளியில் நடைபயிற்சியும் முக்கியம்.