மனநோயை துாண்டும் மரபணு கண்டுபிடிப்பு

மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான 'கிரின்2ஏ' எனும் மரபணுவில் ஏற்படும் அரிய வளர்சிதை மாற்றம் தீவிர மனநோயை துாண்டக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏறத்தாழ, 200 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், இம்மரபணுவை செயலிழக்கச் செய்யும் 'நல்' வகை மாற்றம் கொண்டவர்களில், கால்வாசி பேருக்கு சிறுவயதிலேயே மனச்சோர்வு, தீவிர பதற்றம், உளவியல் சிக்கல்கள் இருப்பது உறுதியானது.

அதேசமயம், வீரியம் குறைந்த மரபணு மாற்றம் கொண்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் குறைவாகவே இருந்தன.

பொதுவாக 'கிரின்2ஏ' பாதிப்பு, வலிப்பு அல்லது வளர்ச்சி தாமதத்துடன் தொடர்புடையது.

ஆனால், சிலர் அத்தகைய உடல்ரீதியான அறிகுறிகள் இன்றி மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒற்றை மரபணுவின் தோல்வி, எவ்விதத் துணையுமின்றி நேரடி உயிரியல் பாதையின் வழியாக மனநோயை உருவாக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

எதிர்காலத்தில் மனநோயாளிகளுக்குத் துல்லியமான மரபணுப் பரிசோதனை செய்யவும், பிரத்யேக சிகிச்சை முறைகளை வகுக்கவும் இந்த ஆய்வு வழிவகுக்கும்.