நோய்தொற்று பரவலை அதிகரிக்கும் வடகிழக்கு பருவமழை!

மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் நீர், அசுத்தமான தண்ணீர், உணவு, சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தால் பலவிதமான தொற்று நோய்கள் பரவுகின்றன.

நம் ஊரில் மழை நீரில் கழிவுநீரும் கலந்தே வருகிறது. இதில் அபாயம் விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ் இருக்கலாம்.

இதனால், டைபாய்டு, மலேரியா, காலரா, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் வரலாம். எனவே, வெளியில் நீரில் விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில், 'ஏடிஸ்' கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவர்.

நன்கு கொதிக்க வைத்து, ஆற வைத்த நீரையும், அப்போதைக்கு அப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே குழந்தைக்கு தர வேண்டும்.

டைபாய்டு, காலரா, அசுத்தமான நீர் வாயிலாகவே பரவுகின்றன. சாப்பிடுவதற்கு முன் சுத்தமான தண்ணீரால் கைகளை கழுவுகின்றனரா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.