தீபாவளி ஸ்பெஷல்... மொறு மொறு தட்டை முறுக்கு ரெசிபி

தேவையானப் பொருட்கள்: அரிசி மாவு : 1 டம்ளர், உளுந்து : 2 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை : 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு : 2 டேபிள் ஸ்பூன்.

எள் : 1/2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் : 4, கறிவேப்பிலை : 1 கொத்து, பூண்டு : 8 பல், பெருங்காயத்தூள் : 1/2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் : தேவையான அளவு.

சூடான கடாயில் அரிசி மாவை ஈரப்பதம் போகுமாறு ஓரிரு நிமிடங்கள் நன்றாக வறுக்கவும்.

உளுந்துப்பருப்பையும் வாசனை வரும் வரை ஒரு சில நிமிடங்கள் வறுத்து, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிக்சி ஜாரில் நைசாக அரைக்கவும்.

கடலைப்பருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். மிளகாய் மற்றும் பூண்டை மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன், அரிசிமாவு, அரைத்த உளுந்து, பொட்டுக்கடலை, நறுக்கிய கறிவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றை சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

அப்போது எள், தேவையான அளவு உப்பு , பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு எண்ணெயையும் சேர்த்து பிசைய வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி தேய்க்கும் பலகையில் சிறிது எண்ணெய் தடவி, தட்டையாக தேய்த்து எடுக்கவும்.

இல்லாவிட்டால் சப்பாத்தி பிரஷர் பலகையில் எண்ணெயை தடவி ஒரு அழுத்து அழுத்தும்போது சீராக வரக்கூடும்.

பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், தட்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். தணலை மிதமாக வைத்தால் மொறு மொறுப்பாக வரும்.