குழந்தைகளுக்கு டயபர் பயன்படுத்துபவரா நீங்க?

குழந்தையை வெளியே எடுத்துச் செல்லும்போது டயபர் அதிகளவில் பயன்படுத்தினாலும், சிலர் குழந்தையின் மறைவு பாகங்களை சுத்தமாக வைக்க நினைத்து வீட்டிலும் அணிவிப்பர்.

டயபர் பயன்படுத்துவது தவறல்ல. ஆனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் அவற்றை சில மணிநேரங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது அவசியம்.

அதிலுள்ள ரசாயனங்களால் குழந்தையின் பிட்டத்தில் ஈரப்பதத்தை நீடித்து, கெட்ட பாக்டீரியாக்களால் சரும பாதிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.

குழந்தையின் உடலில் தொடர்ந்து ஈரப்பதம் நீடிப்பது பூஞ்சைக் காளான் தொற்று ஏற்பட வழிவகுக்கிறது.

எனவே, இதற்கு மாற்றாக காட்டன் துணியாலான ஆன டயபர்களை, குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது, ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

இதுதவிர, குழந்தைகளின் டயபர்களை அப்புறப்படுத்த, அப்படியே ஏதாவது ஒரு பாலிதீன் பிளாஸ்டிக் கவரில் அதை போட்டு தூக்கி எறிவதையும் தவிர்க்க வேண்டும்.

தனியாக அதை மடித்து தூய்மையான பேப்பரில் சுற்றி 'X' என குறிப்பிட்டு, குப்பை கழிவுகளை சேகரிக்க வரும் சுகாதார தூய்மை பணியாளர்களிடம் தகவல் கூறி தர வேண்டும்.

அவர்கள், அந்தந்த உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடத்தில், இதற்கென உள்ள பிரத்யேக மிஷினில் அதை வைத்து எரித்து விடுவர். இதனால், சுகாதார சீர்கேட்டை தவிர்க்கலாம்.

இல்லாவிட்டால், ஆங்காங்கே தூக்கி எறியும் போது, அதிலுள்ள பிளாஸ்டிக் துகள்கள் சரிவர மட்காமல் நில மாசுபாட்டுக்கு வழிவகுக்கும்.