புற்றுநோய்க்கு காரணமாகும் இறைச்சி?

மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். குறிப்பாக குடல் புற்றுநோய் அபாயகரமானது. உலகளவில் இதனால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம்.

இதைத் தடுக்கும் வழிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். சமீபத்தில் சிங்கப்பூரிலுள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் முக்கிய கண்டுபிடிப்பைச் நிகழ்த்தியுள்ளது.

குடல் புற்றுநோயை அதிகப்படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) எனும் ஒரு நொதிக்கு முக்கிய பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நொதியைச் செயலிழக்கச் செய்ய எஸ்பி2509 என்னும் ஒரு மூலக்கூற்றைப் பயன்படுத்த முடியும். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கமிருக்க, டெலோமெரேஸ் நொதிக்கும் நம் உணவுப் பழக்கத்துக்கும் தொடர்புள்ளது. சிவப்பு இறைச்சியை அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆடு, பன்றி, மாடு ஆகியவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி ஆகும். இதை அதிகளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சியிலுள்ள இரும்புச் சத்து உடலுக்கு நல்லது; ஆனால், அளவை மீறும்போது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்படுத்துகிறது.

எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.