ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தரும் 'பிருந்தாவனம்'..!

மஹாபாரதத்தில் பிருந்தாவனத்தில் ராதை மற்றும் கோபியர்களுடன், கண்ணன் மகிழ்ச்சியாக பொழுதினை கழித்ததை படித்திருப்போம். இனிமையான இவ்விடத்தில் கணவனை இழந்த ஏராளமான பெண்கள் குடியேறுகின்றனர்.

பிருந்தாவனத்திற்கு 'விதவைகளின் நகரம்' என்று மற்றொரு பெயரும் உள்ளது.

உ.பி.,யில் மதுராவில் யமுனைக் கரையில் அமைந்திருக்கும் பிருந்தாவனத்தை நோக்கி வரும் பலர், பெரும்பாலும் அவர்களது குடும்பத்தினர் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர்.

சிலர் கணவரை இழந்து வருமானம் இல்லாத காரணத்தாலும், வேறு சிலர் பரம்பரை சொத்துகளை பிரித்து கேட்பார் என்று அவர்களின் குடும்பத்தினரால் வெளியேற்றப்பட்டவர்களாகவே உள்ளனர்.

ஒரு சிலர் மட்டுமே தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் ராதா மற்றும் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையோடு அங்கு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் விதமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016ல் 'ஸ்வதர் கிரே' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

குடும்ப வன்முறை உள்பட பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடிப்படை தேவையை நிறைவு செய்யும் வகையில் கீழ் பிருந்தாவனத்தில் 'கிருஷ்ணா குதிர்' ( கண்ணனின் குடிசை)என்ற பெயரில் தங்கும் இடம் அமைத்துத் தரப்பட்டுள்ளது.

அங்கு தங்கியுள்ளோருக்கு மாலை கட்டுதல், ஊதுபத்தி மற்றும் விளக்குகள் தயாரிப்பது என அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சிறு கைத்தொழில்களை கற்றுக்கொடுப்படுகிறது.