சாலிசிலிக் அமிலம் இருக்கும் கிரீம் நன்மை தருமா?

தோலுக்கு நிறம் தருவது 'மெலனோசைட்ஸ்' என்கிற நிறமி. இது எந்த இடத்தில் அதிகமாகிறதோ, அங்கு 'பிக்மென்டேஷன்' எனப்படும் இயல்பான தோலின் நிறம் மாறி கருப்பாகி விடும்.

சமீப ஆண்டுகளில், பிக்மென்டேஷன் வருவது இளம் வயதினரிடம் அதிகமாக உள்ளது.

ஹேர் டை, அழகுசாதனப் பொருட்கள், ஹேர் கலரிங் இவற்றில் உள்ள அமோனியா, பிபிடி, பவுண்டேஷன் அதிக நேரம் போடுவது, பேர்னெஸ் கிரீம்கள் உபயோகிப்பது இதற்கு முக்கியக் காரணம்.

பல தோல் டாக்டர்கள் ஆன்லைனில், சாலிசிலிக் அமிலம் போன்ற சில வேதிப் பொருட்களின் பெயர்களை சொல்லி, பொதுவாக அனைவரும் இதை உபயோகிக்கலாம் என்கின்றனர்.

பேஷ்வாசில் ஒரு சதவீத அடர்த்தியில் சாலிசிலிக் அமிலம் உள்ளது. 30 சதவீத அடர்த்தியில் 'ஜெல், கெமிக்கல் பீல்'லாக உள்ளது.

வெறுமனே சாலிசிலிக் ஆசிட் என்று சொல்லும்போது, நம் தோலுக்கு சரி வருமா என்று எதைப் பார்த்து, தேர்வு செய்வர்? அமிலத்தன்மை உள்ளவற்றை, டாக்டரின் ஆலோசனையின்றி உபயோகிப்பது ஆபத்தாக முடியலாம்.

முகப்பொலிவிற்காக விற்கப்படும் 'பிரைட்னிங் கிரீம்'களில் உடனடி தீர்விற்காக ஸ்டீராய்டு இருக்கும்.

இதைத் தொடர்ந்து பூசும்போது, தோல் வெளுத்துப் போய் அடர்த்தி குறையும். கிரீம் போடுவதை நிறுத்தினால், ஒன்று தோல் கருத்து விடும். அல்லது முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும்.

தொடர்ந்து ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்தினால் முகத்தில் முடி வளர்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.