காலை உணவை தவிர்ப்பதால் இதய பாதிப்பு உண்டாகுமா?

காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, குறிப்பாக அது நீண்டகால பழக்கமாக மாறும்போது, இதய ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும்.

காலை உணவை சாப்பிடுவது மட்டுமே இதய நோயை தனியாகத் தடுக்காது; ஆனால், அதனை தவிர்ப்பது பல ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கிறது.

அதாவது, காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு மதியத்திற்கு மேல் கடுமையான பசி ஏற்பட்டு, மதிய அல்லது இரவு உணவின் போது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உருவாகலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கலோரி கொண்ட தின்பண்டங்கள், சர்க்கரை பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் நிலைக்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து சமநிலையற்ற உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அளவுகளில் மாற்றம் போன்ற சூழலுக்கு வழிவகுக்கலாம்.

இவையனைத்தும் இதய நோய்க்கான முக்கியமான ஆபத்து காரணிகள் என்பது டாக்டர்களின் எச்சரிக்கையாகும்.

இருப்பினும், காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் தாக்கம் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே இருக்கும்.

ஒருவர் காலை உணவை தவிர்த்தாலும், மற்ற வேளைகளில் சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடல் எடையை கட்டுக்குள் வைத்தால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமென கூற முடியாது.

எனவே, காலை உணவை தவிர்ப்பதை விட, நாள் முழுவதும் என்ன வகையான உணவுகளை உட்கொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

சர்க்கரை அதிகமுள்ள பானங்கள், பொரித்த உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், அடிக்கடி அளவுக்கதிமாக சாப்பிடும் பழக்கத்துக்கு குட் பாய் சொல்லவும்.

முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் தேவையான அளவு புரோட்டீன் போன்றவற்றை உணவில் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.