கூகுள் பே செயலியின் பாக்கெட் மணி... பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்!
'கூகுள் பே' செயலியில் புதிதாக, 'பீப்பிள்' என்ற இடத்தில், இதய வடிவில் 2 கைகள் இணைந்வாறு வடிவமைக்கப்பட்டு, 'பாக்கெட் மணி' என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, வங்கி கணக்குகள் இல்லாத மகன், மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும், 'கூகுள் பே' செயலியை பயன்படுத்தி பணம் செலவு செய்ய முடியும்.
அதற்கு, 'கூகுள் பே' செயலியுடன் வங்கி கணக்குகளை இணைத்து இருக்கும் நபர் அனுமதியளிக்க வேண்டும். அப்போது தான், அவர்களால் பணத்தை செலவு செய்ய முடியும்.
ஆனால், அவர்கள் இஷ்டம் போல செலவு செய்வதையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பாக்கெட் மணி என்ற இடத்தில் 'லிமிட் செட்' செய்து கொள்ளலாம்.
இதனால், அனுமதி பெற்ற நபர்கள், 'கூகுள் பே' செயலியில், 'பின் நம்பர்' பயன்படுத்தி, செலவு செய்யலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் செலவு செய்ய, மீண்டும் அனுமதி பெற வேண்டும்.
கூகுள் பே வாயிலாக பாக்கெட் மணி பெற்ற மகனோ, மகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ, கடையில் வாங்கும் பொருட்களுக்கு கியூ.ஆர்., கோடு ஸ்கேன்' செய்வர்.
அப்போது, வங்கி கணக்குள்ள நபருக்கு, 'இதை அனுமதிக்கலாமா' என குறுஞ்செய்தி வரும்; செயலியின் ரகசிய எண்களை உள்ளீடு செய்தால் மட்டுமே பணம் கழிக்கப்படும்.
இந்நிலையில், 'கூகுள் பே' செயலியில், 'பாக்கெட் மணி' என்ற இடத்தை தொட்டாலே மொத்த பணமும் காலியாகி விடும் என, கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.
இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாமென, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.