பென்னி டிராப்... தெரியாத கணக்கிலிருந்து பணம் வந்தால் ஆபத்து?

ஒருசில நேரங்களில் தெரியாதவர்களிடம் இருந்து உங்களின் வங்கிக்கு தினமும் நெட் பேங்கிங் வாயிலாக குறைந்தப்பட்சமாக தினமும் ரூ. 1 வீதம் பணம் செலுத்தப்படும்.

பலரும் 1 ரூபாய்தானே என அசால்டாக விட்டு விடுவர். ஆனால், இதை 'பென்னி டிராப்' சோதனை என வங்கித்துறையில் சொல்வர்.

யாரோ மோசடிக்காரர், உங்கள் கணக்கை சோதித்துப் பார்க்கிறார் என அர்த்தம். இதில் 3 வழிமுறைகள் உள்ளன. முதலில், உங்கள் கணக்கு ஆக்டிவ்வாக உள்ளதா என பார்க்கிறார்.

இரண்டு, 1 ரூபாய் போடும்போது, பணம் அனுப்பும் மோசடிக்காரருக்கு உங்களுடைய கணக்கு எண், பெயர் ஆகியவை குறுஞ்செய்தியாக போய்ச்சேரும். அது அவருக்கு தகவல்.

மூன்றாவது, உங்கள் வங்கிக் கணக்கை, ஏதோ ஒரு யு.பி.ஐ. செயலி அல்லது ஆட்டோ டெபிட் வசதியோடு இணைக்கிறார். முதலில் 1 ரூபாய் போட்டு சரி பார்க்கிறார்.

நாளை உங்கள் கணக்கிலிருந்து பெரிய தொகையை எடுப்பதற்கான ஆரம்பம் இது. விரைவில் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும்.

நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, அதை நிரூபிக்கும் விதமாக ஒரு ரூபாய் போட்டிருக்கிறேன் பாருங்கள் என்பார்; உங்களை நம்ப வைக்கும் முயற்சி அது.

இதன் வாயிலாக, மெல்ல மெல்ல, உங்களிடம் இருந்து ஓ.டி.பி. எண்ணை பெறக்கூடிய அளவுக்கு நெருக்கத்தை உருவாக்கி கொள்வார்.

உஷாராக ஒரு சில விஷயங்களைச் செய்யுங்கள். உங்கள் வங்கி கிளைக்கு போய் இந்த ஒரு ரூபாய் விஷயத்தை சொல்லி, புகாராக எழுதி கொடுங்கள்.

யார் அந்த பணத்தை போடுகிறார், கணக்கு ஏதேனும் யு.பி.ஐ. கணக்குடன், ஆட்டோ டெபிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என கண்டுபிடித்து, அப்படி ஏதேனும் இருந்தால், நீக்க சொல்லவும்.

வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று யாரேனும் கூப்பிட்டால், கவனமாக கையாளவும். உங்களுக்கு வரும் ஓ.டி.பி. எண் அல்லது வேறு எந்த விவரத்தையும் பகிர வேண்டாம்.