ஜெல்லி மீன்களை ரசிப்பவரா நீங்க? மன்னார் வளைகுடா கடலில் நிறைஞ்சிருக்கு அழகும்.. ஆபத்தும் !
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் காணப்படுகின்றன. இவற்றை கடல் ஆமைகள் உணவாக உட்கொள்கின்றன.
'ஜெல்லி பிஷ்' என ஆங்கிலத்திலும் சொரிமுட்டை என தமிழிலும் இவை அழைக்கப்படுகின்றன.
கடலின் ஆழமான பகுதிகளில் மட்டுமின்றி கரையிலும் இவை வாழும். கரையில் ஒதுங்கி கிடக்கும்போது பார்வைக்கு மிக அழகாக தென்பட்டாலும் தீங்கு விளைவிக்கக்கூடும்.
'பாலிப்' பருவத்தில் உருவாகும் கருக்கள் பாறைகளில் தொற்றிக் கொண்டு, கடல் பாசி தாவரம் போல் மெதுவாக வளர்ந்து, பின் சிலநாட்களில் பாறையிலிருந்து பிரிந்து ஜெல்லி மீன்கள் உருவெடுக்கும்.
மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிக்கும் போது இவ்வகையான ஜெல்லி மீன்களின் தாக்குதல் ஏற்படும்.
இதனால் மனிதர்களுக்கு மூச்சடைப்பு ஏற்படுவதுடன் இதயத்தையும் செயலிழக்க செய்யும். இதன் நச்சு ஆபத்தை விளைவிக்கும்.
எனவே, ஜெல்லி மீன்களின் அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவற்றை கைகளால் தொடுவது ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது.