மறந்துடாதீங்க... இது மயானக்குச்சி !
சிகரெட்டை 'மயானக்குச்சி' என்று கூறலாம். உலகளவில் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் புகைப்பிடிப்பதால் இறக்கின்றனர்.
இதில், 5 லட்சம் பேர் புகைப்பிடிக்காமல், புகைப்பிடிப்பவர்களால் பாதிக்கப்படும் 'பாசிவ் ஸ்மோக்கிங்' எனப்படுபவர்கள். இதில், சிறுகுழந்தைகளும், மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளும் புகைப்பிடிப்பதால் பாதிக்கப்படுகிறது. மொத்த ஆயுளில் பத்தாண்டுகள் குறைகிறது.
இந்தியாவில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் இறக்கின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பிடித்தல், போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர்.
நாள் ஒன்றுக்கு எத்தனை முறை எப்படி சிகரெட் பிடிக்கின்றனர் என்பதைப் பொறுத்து அதனால் வரும் விளைவுகளும் ஏற்படுகின்றன.
ஒருவர் ஒரு முறை புகைப்பிடிக்கும் போது அவர் விடும் புகையில், 7000க்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் வெளியாகின்றன.
அந்த புகையின் நச்சுப்பொருட்களில் உள்ள 70 வேதிப்பொருட்கள் புற்று நோயை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து சிகரெட் புகை எவ்வளவு அபாயகரமானது என்று அறியலாம்.
புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய், தொண்டை, சிறுநீரக, கணைய புற்றுநோய்கள், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு, எலும்பு அடர்த்தி குறைவு நோய் உட்பட பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மலட்டுத்தன்மை வரும் வாய்ப்புள்ளது. கண்புரை, பார்வையிழப்பு ஏற்படலாம். பெண்களுக்கு கருச்சிதைவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
உடலிலுள்ள அனைத்து தமனிகளும் சுருங்கி கால்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புகைப்பிடிப்பதால் மாரடைப்பு வரும் போது காப்பாற்றுவது கடினம்.