கார்ட்டூன்களை தொடர்ந்து பார்க்க அனுமதிக்க வேண்டாம்! பெற்றோருக்கு டாக்டர்கள் அறிவுரை

இன்றைய தினம் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக, கார்ட்டூன் தொடர்களை மணிக்கணக்கில் பார்க்கின்றனர்.

அதன் பாதிப்பாக, நாளடைவில் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களாக மாறுவதால், மன தளவிலும், உடலளவிலும் பாதிக்கின்றனர்.

இவ்விஷயத்தில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

குழந்தைகளுக்கான கார்டூன் சேனல்கள் எண்ணிக்கை, கடந்த, 10 ஆண்டுகளில் அனைத்து மொழிகளிலும் அதிக எண்ணிக்கையில் வந்து விட்டன.

அதுவும் இடைவெளியின்றி, பல தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. பல தொடர்களுக்கு குழந்தைகள் அடிமைகளாகி விடும் அளவுக்கு ஆர்வமாக பார்ப்பதை காண முடிகிறது.

தற்போது ஒளிபரப்பப்படும் கார்டூன் தொடர்கள், இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் தயாரானவையும் ஒளிபரப்பப்படுகிறது.

சிறு வயதிலேயே காதல், வன்முறை போன்ற காட்சிகளும் இடம் பெறுகின்றன.

கோவையில் கார்ட்டூன்களுக்கு அடிமையாகி, அவற்றில் வரும் கேரக்டர்கள் போல், மாற்றி கொண்ட 3 குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் 'கவுன்சிலிங்' கொடுத்துள்ளனர்.

குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது.

அதற்கு மேற்பட்ட வயதினர், பாடம் சார்ந்த விஷயங்களை குறைவான நேரம் மட்டும் பார்க்க அனுமதிக்கலாம். கார்டூன் தொடர் அதிக நேரம் பார்ப்பதை ஊக்குவிக்கக் கூடாது என அறிவுறுத்துகின்றனர்.