குழந்தைகள் உயரமாக வளர இதையெல்லாம் தவிர்க்காதீங்க

குழந்தைகளின் உயரம் சற்று குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டுமின்றி, உடல் வளர்ச்சி ஹார்மோன் துாண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்கள் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும் தான் இந்த பிரச்னையை ஏற்படுத்தும்.

உடலிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி தான், மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கிறது. இந்த சுரப்பை துாண்டி, சீராக வைத்திருந்து உயரமாக வளர பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ...

ஆழ்ந்த துாக்கம்... நாம் துாங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, நாம் உயரமாக வளர, உடலுக்கு போதிய ஓய்வு தேவை.

கால்சியம் சத்துள்ள உணவுகள்... எலும்புகள் வலிமையாக கால்சியம் அவசியம் என்பதால், பால் பொருட்கள், முட்டை, மீன், காளான் மற்றும் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

தண்ணீர்... குளிர்பானங்கள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்கும்போது, உடலின், 'மெட்டபாலிசம்' அதிகரிக்கும்.

வைட்டமின் டி... எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் இது சத்துக்களை தரும். சிறு வயதிலேயே குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கினால் இச்சத்து எளிதாக கிடைக்கும்.

ஸ்கிப்பிங் உடற்பயிற்சிகள்... குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதை தவிர்த்து, ஓடி, ஆடும் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்டால் வயதுக்கேற்ற உயரம் கிடைக்கும்.

குறிப்பாக, கூடைப்பந்து, ஸ்கிப்பிங், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம் மற்றும் நீச்சல் போன்றவற்றை விளையாடச் செய்யலாம்.