டீனேஜ் பருவத்தில்.. முகப்பருக்களை தவிர்க்க...!

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள், எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றின் காரணமாக முகப்பருக்கள் உண்டாகின்றன.

இது சருமத் துளைகளில் வீக்கம், சிவத்தல் ஏற்பட வழிவகுக்கிறது. ஹார்மோன்களின் செயல்பாட்டினால் எண்ணெய் சுரப்பிகள் தூண்டப்படுவதால், டீன் ஏஜ் பருவத்தில் அதிகளவில் முகப்பரு வர வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு முகப்பரு இருந்தால், உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. முகப்பருக்கள் வராமல் தடுக்க முடியாது. ஆனால் அதன் தீவிரத்தை குறைக்க வாய்ப்புள்ளது.

சருமத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவும் போது, துளைகளை அடைக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய்கள், இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது.

சருமத்துளைகளை வியர்வை அடைத்து முகப்பருவை மோசமாக்க வாய்ப்புள்ளதால், உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலை செய்த பிறகு முகத்தை மறக்காமல் கழுவ வேண்டும்.

லோஷன் அல்லது மேக்கப் பொருட்களை வாங்கும் போதும், சருமத்துளைகளை அடைக்காத வகையில் உள்ள தரமான பிராண்டுகளுக்கு முன்னுரிமைத் தரவும்.

ஹேர் ஸ்ப்ரே அல்லது ஸ்டைலிங் ஜெல் போன்ற பல கூந்தல் தயாரிப்புப் பொருட்களில் முகப்பருவை மோசமாக்கும் எண்ணெய்கள் உள்ளன. எனவே, தண்ணீர் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம்.

முகப்பருவை அழுத்தினாலோ, கிள்ளினாலோ பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள சீழ், சருமத்தில் இன்னும் ஆழமாக தள்ளப்படலாம். இது வீக்கம், சிவத்தல், வடுக்களை ஏற்படுத்தும்; வடுக்கள் நிரந்தரமாக இருக்க வாய்ப்புள்ளது.

போதுமான வைட்டமின்கள், தாதுக்களை பெறுவதன் மூலம் உங்களின் சருமம் பளபளப்பாகும். பருக்கள் அதிகளவில் வரும் போது உரிய தோல் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.