குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 நீரிழிவு பாதிப்பு

தமிழகத்தில் டைப் 1 நீரிழிவு பாதிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், ஆண்டுதோறும், 5 % அதிகரித்து வருகிறது.

டைப் 1 நீரிழிவு பாதிப்பு என்பது கணையத்திலுள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில், செல்கள் மெதுவாக பாதிக்கப்படுகிறது. 80 % பாதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை வெளிப்படுகிறது.

சுற்றுச்சூழல், மரபணு, வைரஸ் பாதிப்பு, அதிக மன அழுத்தம் போன்றவை இப்பாதிப்புக்கு காரணங்களாக இருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுக்க சிகிச்சை எடுத்துக்கொள்வது கட்டாயம். இன்சூலின் ஊசி அல்லது மருந்துகளை தினமும் எடுக்க வேண்டும்.

அதிகளவில் தாகம், சிறுநீர் கழித்தல் மற்றும் பசி, எடை குறைதல், உடல் சோர்வு, சிறுநீர் பாதை தொற்றுகள், வழக்கத்தை விட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி இதன் அறிகுறிகள்.

இக்குழந்தைகளுக்கு, இனிப்புகள், குளிர்பானங்கள் , சர்க்கரை, உருளைக்கிழங்கு , மாம்பழம், பலாப்பழம், சாஸ், ஜாம், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சத்தான காய்கறிகள், கீரைகள், வேர்க்கடலை, பாசிப்பயறு, கேழ்வரகு, கொய்யாக்காய், முலாம்பழம், முட்டைகோஸ், மற்றும் வயதுக்கு ஏற்ப புரதச்சத்து உணவுகளை கொடுக்கவேண்டும்.

முறையான சிகிச்சை இல்லாவிட்டால், கண், நரம்பு, கிட்னி பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. ஹைப்போ தைராய்டிசம், சீலியாக் மற்றும் பிற ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் வரலாம்.

பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முறையான சிகிச்சை இருந்தால் இக்குழந்தைகள் பிறரை போல் இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.

டைப் 1 நீரிழிவு சர்க்கரை பாதிப்புக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.