சிறுநீர் கழிக்க சிரமப்படும் முதியோர்...

வயதானால் உடலில் சில மாற்றங்கள் நடக்கும். ஆண்களில் 10ல் ஏழு பேருக்கு, புரோஸ்டேட் சுரப்பி வீக்கமடையும். இங்கு உற்பத்தியாகும் செல்கள் இறக்காததால் சிறுநீர் கழிக்க சிரமம் ஏற்படுகிறது.

மிக அரிதாக இந்த வீக்கம் கேன்சராக மாறலாம். புரோஸ்டேட் சுரப்பி வீங்குவதால் சிறுநீர் குழாயை அழுத்தலாம்.

இதனால் சிறுநீர் சரியாக வெளியேறாமல் தடைபடுதல், சொட்டு சொட்டாக வெளியேறலாம். 50 வயதை நெருங்கும் போதே, இரவில் 2-3 முறை சிறுநீர் கழிக்க எழுந்திருப்பர்.

நாளடைவில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதற்கு, மருந்துகள், எளிய லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்வதால், தீர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால், பிறப்புறுப்பு, சிறுநீர்ப்பை திசுக்களில் வறட்சி ஏற்படலாம்.

இது சிறுநீர் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென தோன்றும் போதோ, இருமும் போதோ சிறுநீர் வெளியேறிவிடும்.

இதற்கு, இடுப்பு தசைகள் பலவீனமாக இருப்பதே காரணம். மற்ற தசைகளை போல, இடுப்பு தசைகளை பலப் படுத்த பயிற்சி எடுக்க வேண்டும்.

சின்ன வயதில் சிறுநீர் அடக்க தசைகளை உள்ளிழுப்பது போன்ற பயிற்சியை, காலை, மதியம், இரவு தலா 50 முறை செய்யும் போது, அப்பகுதி தசை வலுவடையும்.

இதுதவிர, சர்க்கரை நோயாளிகள், நரம்பியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், தொடர் மருந்துகள் எடுத்து கொள்வோருக்கும் அடிக்கடி சிறுநீர் வெளியேறலாம்.

பொதுவாக பகல் நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பது, மாலை நேரத்திற்கு பிறகு தண்ணீர் அளவை குறைத்து கொள்வதும் நல்லது.

ஆனால் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.