பனி விழும் காலத்தில் தேவை கூடுதல் கவனம் !
பனி காலங்களில் பொதுவாகவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
பள்ளிகளில் அருகருகே அமர்வதால், எளிதாக மற்ற குழந்தைகளுக்கு பரவும். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புள்ள குழந்தைகளை ஒரு சில நாட்கள் அனுப்பாமல் இருப்பது நல்லது.
பனி நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம். சுடு தண்ணீர், சூடான உணவு கொடுக்கலாம்.
ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வர வாய்ப்புண்டு. ரெகுலராக பாதிப்பு உள்ளவர்கள், இந்த 3 மாதங்களுக்கு தடுப்பு மருந்துகளை, டாக்டர் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ளலாம்.
அதிக காய்ச்சல், மூச்சு விட சிரமம், உணவு அதிகம் எடுத்துக்கொள்ளாமை, சோர்வு இருந்தால் மருத்துவரை பார்த்து விட வேண்டும்.
கடந்த முறை கொடுத்த மருந்தையே வாங்கி கொடுப்பது, அந்த அளவை மீண்டும் தொடர்வது, முற்றிலும் தவறு.
குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்து, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகம் எடுத்துக்கொண்டால், லிவர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சரியான இடைவெளியில் தான் மருந்து கொடுக்க வேண்டும்; காய்ச்சல் அதிகமுள்ளது என, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுப்பது, தாமாக மருந்துகள் வாங்கிக்கொடுப்பது கூடாது.