இதய கோளாறுகளை ஏற்படுத்தும் உணவுகள்!

உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மாரடைப்புக்கு முக்கிய காரணம். நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிகரித்த ரத்த கொழுப்பு அளவு ஆகியவை ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகின்றன.

முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் நிறைந்த உணவுகள் நம் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

நிறைவுற்ற கொழுப்புகள்... ரத்த கொழுப்பை அதிகரித்து, தமனியில் கொழுப்பு உருவாவதை வேகப்படுத்துகின்றன.

எனவே, பிஸ்கட், ரஸ்க், பரோட்டா, நுாடுல்ஸ், பப்ஸ், சமோசா போன்ற மைதாவில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான சோடியம் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஊறுகாய், அப்பளம், சிப்ஸ் உள்ளிட்ட உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் பருமன், நீரிழிவு, மாரடைப்பு வரும் அபாயத்தை அதிகரிப்பதால், முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

தேவைப்பட்டால் வெல்லம், தேன், பனை சர்க்கரை, தேங்காய் சர்க்கரையை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

சிவப்பு இறைச்சி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வாரத்தில் இரண்டு முறைக்கும் குறைவாகவே அசைவம் சாப்பிட வேண்டும்.

மாறாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன. பழங்கள், காய்கறிகளிலுள்ள ஆக்சிஜனேற்றிகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன.

மேலும், மீன்களில் உள்ள ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்து இதயத் துடிப்பை சீராக்குகின்றன. குறிப்பாக சால்மன், கானாங்கெளுத்தி, மத்தியை அதிகம் சேர்க்கலாம்.

முழு தானியங்கள்... உமி நீக்காத அரிசி, சிறு தானியங்களில் கொழுப்பைக் குறைக்கும் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். பருப்பு வகைகளில் கொழுப்பு குறைந்த புரதங்களே உள்ளன.

ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் பாதாம், கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம்.

சர்க்கரை பானங்கள், இனிப்பு வகைகள், உப்பு நிறைந்த சிற்றுண்டிகள், வறுத்த உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சிகளை முற்றிலும் தவிரப்பது நல்லது.