நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு... இனி வாரத்துக்கு ஒரு ஊசி மட்டுமே போதும்!
நம் நாட்டில் தற்போது 10.1 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; முந்தைய நிலையில் 13.6 கோடி பேர் உள்ளனர்.
உடலில் இன்சுலின் உற்பத்தியாகாத நிலையில் உள்ளவர்கள், 'டைப் - 1' நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த வகை நீரிழிவால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தினமும் இன்சுலின் ஊசி செலுத்தும் தேவையுள்ளவர்கள்.
தீவிர 'டைப் - 2' நீரிழிவுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, தினமும் இன்சுலின் செலுத்த வேண்டிய நிலையுள்ளது.
தினமும் ஊசி போடுவதற்கு பயந்து, பலர் இன்சுலின் சிகிச்சையை தொடங்குவதை தாமதப்படுத்தி வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில், வாரம் ஒரு முறை மட்டும் செலுத்தும் புதிய இன்சுலின் ஊசியை, ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இப்புதிய மருந்து, 'இன்சுலின் ஐகோடெக்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. 'பிளெக்ஸ்டச்' என்ற பேனா வடிவ கருவி வாயிலாக செலுத்தப்படும்; நம் நாட்டில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இன்சுலின் ஊசி செலுத்தும் சுமை குறைவதால், அவர்கள் சிகிச்சையை தாமதப்படுத்தாமல், தொடர்ந்து சிகிச்சையை பின்பற்ற இது உதவும்.
தற்போது பயன்பாட்டிலுள்ள தினசரி இன்சுலினுடன் ஒப்பிடுகையில் இது, 30 - 40 சதவீதம் வரை விலை மலிவானது என, மருந்து நிறுவனம் கூறியுள்ளது.