கிளாண்டர்ஸ் பாக்டீரியா தொற்று: குதிரைகளை ஏன் தனிமைப்படுத்த வேண்டும்?
சென்னையில், பொதுமக்கள் சவாரிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரை ஒன்று, 'கிளாண்டர்ஸ்' நோய் தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, குதிரைகளை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'கிளாண்டர்ஸ்' என்பது, பாக்டீரியாவால் ஏற்படும் கொடிய தொற்றாகும்.
இது குதிரை, கழுதை போன்ற விலங்குகளைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல், அவற்றோடு நெருங்கி பழகும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு ஆபத்தான நோய்.
இந்த நோய்க்கு, இதுவரை முழுமையான தடுப்பூசியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ கிடையாது.
இதனால், தொற்று உறுதியான விலங்குகளை சட்டப்படி கருணைக் கொலை செய்வது தான், தற்போதைய மருத்துவ நடைமுறையாக உள்ளது.
பாதிக்கப்பட்ட குதிரையின் சளி, கண்ணீர், உடலில் உள்ள புண்களிலிருந்து வடியும் திரவங்கள் மூலமும், அவை பயன்படுத்திய தண்ணீர் வாளி, தீவனத் தொட்டிகள் மூலமும், இந்த தொற்று பரவக் கூடியது.
மேலும், வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து குதிரைகளைக் கொண்டு வருவதற்கும், எல்லைகளில் அவற்றின் நடமாட்டத்திற்கும், தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
குதிரை வளர்ப்போர் அதனிடன் சளி, இருமல், தோலில் புண்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.