மனச்சோர்வு, மன அழுத்தம் போக்கும் தோட்டக்கலை!!
தோட்டக்கலை மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பசுமையாக்கி, சுத்தமான காற்றையும் வழங்கக்கூடியது.
இயற்கை சூழ்ந்த பூங்காக்களில் நடக்கும் போதோ அல்லது பறவைகளின் இனிய சத்தங்களை கேட்கும் போதோ, மூளையிலுள்ள, பிரிபரல் கார்டெக்ஸ் ஆற்றல், 10 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகின்றனர், ஆய்வாளர்கள்.
இந்த கார்டெக்ஸ் தான், மூளையின் செயல்களான கவனம், நினைவு, முடிவு எடுக்கும் ஆற்றல் போன்றவைகளில் முக்கிய பங்காற்றுகிறது.
வாரம் இருமுறை தோட்ட பணிகளை செய்கிறவர்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைவதாக, புளோரிடா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மேலும், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் வாழும் பெண்களுக்கு, 'மெனோபாஸ்' காலம், ஓராண்டு தள்ளிப் போகிறது.
இயற்கை சார்ந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால், அவர்களது கோபம் குறையும் என்கின்றனர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
குழந்தைகளிடம் ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்த, பசுமை சார்ந்த இடங்கள் உதவுகின்றன. தோட்டம் தொடர்பான செய்முறை பயிற்சிகள், கடினமான நேரத்தை குழந்தைகள் கடந்து வர உதவுகின்றன.
தினசரி ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும் ஆற்றல் தோட்டக்கலைக்கு உண்டு. தினமும் அரை மணி நேரம் தோட்டக்கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் சுமார் 200 கலோரிகளை எரிக்க முடியும்.