குறுகிய காலத்தில் லாபம் தரும் கீரை... இதோ சில டிரிக்ஸ் !
அரைக்கீரை, சிறுகீரை, தண்டு கீரை, முருங்கை என ஒவ்வொன்றும் சத்து மிகுந்தவை. அனைத்து வகையான கீரைகளும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும்.
குறிப்பாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கீரை சாகுபடிக்கு ஏற்றது. குளிர்ச்சியான பகுதிகளிலும் கீரைகளை வளர்க்க முடியும்.
சிறு கீரை, அரைக் கீரை, முளைக்கீரை, தண்டுகீரை, பொன்னாங்கன்னி, பசலி, மணத்தக்காளி கீரைகளை தனித்தனி பாத்திகளில் சாகுபடி செய்யலாம்.
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிக களிமண், முழுதும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவும்.
சிறிதாக இருப்பதால் சீராக விதைக்க, விதையுடன் மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் துாவி, அதன் மேல் மண் அல்லது மணலை துாவி மூடவேண்டும்.
தினமும் அல்லது மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர்ப்பாய்ச்சவும். உப்புநீர் முளைப்புத் திறனைப் பாதிப்பதால், முளைக்கும் வரை நன்னீர் பயன்படுத்தவும்.
பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சினால் தான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாது. அடுத்து 3ம் நாள் உயிர்த்தண்ணீரும் அதன் பின் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவும்.
விதைத்த 6 முதல் 8 நாட்களில் முளைத்து விடும். பிறகு 12 முதல் 15 செ.மீ இடை வெளியில், செடிகளை கலைத்து விட்டால் சீராக வளரும்.
அடியுரமாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து போன்ற பல உரங்களை அளிக்கலாம். விதைத்த 10 - 15 நாட்களில் களை எடுக்கவும்.
இலை கடிக்கும் புழுக்கள், இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த வேப்ப எண்ணெய், இயற்கை உயிர் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.
தண்டுக்கீரையை மீண்டும் மீண்டும் கிள்ளி விடலாம். முளைக்கீரையை விதைத்த 21 - 25 நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும்.
அரைக்கீரையை விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவும். பின் 7 நாட்கள் இடைவெளி என 10 முறை அறுவடை செய்யலாம்.
சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறையும், தண்டுக்கீரையை விதைத்த 35 - 40 நாட்களில் வேருடனோ, கிளைகளை மட்டுமோ அறுவடை செய்யலாம்.