ஓய்வு கால செலவுக்கு சேமிக்காதவரா நீங்க?

பணி ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறோம் என்பதை, 58 வயதில் முடிவெடுக்கக்கூடாது. அது, 40 - 45 வயதிலே திட்டமிட்டிருக்க வேண்டும்.

அஞ்சல் சேமிப்பு, வங்கி நிரந்தர வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில், மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதமாவது சேமிப்பது அவசியம்.

மருத்துவ காப்பீடு திட்டங்களில் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவசர நிதியாக உங்கள் ஆறு மாத சம்பளத்தை பணமாக வைத்திருப்பது நல்லது.

40 வயதுக்கு மேல், வீட்டுக்கடன் வாங்கி நீண்டகால இ.எம்.ஐ.,களில் சிக்குபவர்கள், முதுமைக்கான சேமிப்புக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி விட வேண்டும்.

குழந்தைகளின் படிப்பு, வீட்டு செலவுக்கு பட்ஜெட் போடும் போதே, முதுமைக்கான சேமிப்புக்கும் தொகை ஒதுக்க வேண்டும்.

சம்பாதிக்கும் பணத்தை முழுக்க செலவழித்தால், பணி ஓய்வுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்; ஆனால், உடல் ஒத்துழைக்காது.

பொருளாதார சுதந்திரம் முதுமையில் பெரிய நம்பிக்கையை தரும். மனதுக்கு பிடித்ததை செய்வது, சுற்றுலா செல்வது, புது மனிதர்களை சந்திப்பது என புத்துணர்வாக மாற நிதி தேவை.

இதுவரை திட்டமிடாதவர்கள், பணி ஓய்வின் போது கிடைக்கும் கிராஜூவிட்டி, பி.எப்., சேமிப்பு ஆகியவற்றையாவது பாதுகாக்க வேண்டும்.

இவற்றை எந்த வகையில் லாபம் தரக்கூடிய நிதி ஆதாரமாக மாற்றலாம் என, தகுந்த நிதி ஆலோசகர்களிடம் கலந்தாலோசிப்பதும் நல்லது.