உடலுக்கு புத்துணர்ச்சி பெற உதவும் சுரைக்காய்!

வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த, நீர் காய், சுரைக்காய். இனிப்பு, கசப்பு என, இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.

இதில், 96.1 சதவீதம் ஈரப்பதமும், 0.2 சதவீதம் புரதமும், 0.1 சதவீதம் கொழுப்பும், 0.5 சதவீதம் தாது உப்புகளும், 0.6 சதவீதம் நார்ச்சத்தும், 2.5 சதவீதம் கார்போஹைடிரேடும் உள்ளது.

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. உடல் சூட்டை தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும்.

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியை புதுப்பிக்க, இக்காய் பயன்படுகிறது.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய், இவற்றை நீர் விட்டு அரைத்து, சாறு பிழிந்து வாரம் இருமுறை, காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

சுரைக்காயின் சதையை சிதைத்து, உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச சுட்டு சாம்பலாக்கி, தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.