நீரின்றி அமையாது உடல் நலம்

உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவர்.

தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றால், பலவிதமான பிரச்னைகள் வரும் என்று ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது தான் முதல் முறையாக தண்ணீர் குடிப்பதற்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, 18 - 35 வயது வரையுள்ள 100 ஆரோக்கியமான ஆண்கள், பெண்களை இங்கிலாந்திலுள்ள பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அவர்களில் ஒரு பகுதியினருக்கு தினமும் 1.3 லிட்., தண்ணீரும், மற்றொரு பிரிவினருக்கு 4.4 லிட்., தண்ணீரும் கொடுத்தனர். தொடர்ந்து ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டனர்.

யார் குறைவான தண்ணீர் அருந்தினரோ அவர்கள் உடலில், 'ஸ்ட்ரெஸ் ஹார்மோன்' எனப்படும் கார்டிசால் நாளமில்லா சுரப்பி அதிகமாக சுரந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நமக்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சிறுநீரகத்துக்கு மேல் இருக்கக்கூடிய அட்ரினல் சுரப்பிகளில் இருந்து இந்த ஹார்மோன் உற்பத்தியாகும்.

இது, உடலுக்கு ஆற்றல் தந்து ஆபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும். ஆனால், இந்த ஹார்மோன் நமக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்படும்போது மட்டும் தான் தேவை.

தேவையற்ற நேரங்களில் அடிக்கடி இச்சுரப்பி துாண்டப்படுமானால், அது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய்கள், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, அனைத்து விதத்திலும் உடலுக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.