கல்லீரலை காக்கும் மூலிகைகள்...

பசி உணர்வு, உணவு செரிமானம், நச்சுகளை அகற்றுதல், கிருமி நீக்கம், சீரான துாக்கம் என்று, 500க்கும் அதிகமான பணிகளை அன்றாடம் கல்லீரல் செய்கிறது.

முறையற்ற உணவு பழக்கம், மதுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, உடல் எடை கூடுதல், வைரஸ் தொற்று ஆகியவற்றால், கல்லீரல் பாதிப்படைகிறது.

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேருவது, வைரஸ் தொற்று என்று அவை செயலிழப்பு வரை பல பாதிப்புகள் உள்ளன.

எந்த பாதிப்பாக இருந்தாலும், ஆரம்பத்தில் அறிகுறிகளை கல்லீரல் வெளிப்படுத்தாது.

கல்லீரல் பாதிப்படையும் போது, பசியின்மை, உணவின் மீது வெறுப்பு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, வயிறு வீக்கம், மஞ்சள் காமாலை, உடல் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் வரலாம்.

மேலும் வெளிரிய மலம், அடர் மஞ்சள் நிற சிறுநீர், உடல் சோர்வு, அரிப்பு, ரத்தக்கசிவு, முற்றிய நிலையில் நினைவு தடுமாற்றம் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும்.

எளிய மூலிகைகளை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி வர, பல கல்லீரல் நோய்களை தடுக்கலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, கொளிஞ்சி, கோடகசாலை, பொன்னாங்கண்ணி, நீலி அவுரி, அருகம்புல், நாயுருவி, நீர்முள்ளி, நெருஞ்சில் போன்றவை சிறந்த பலன் தரும்.

கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி எனும், 'கீரை இரட்டையர்களை' மாதம் இரண்டு நாட்களாவது, உணவில் சேர்க்க வேண்டும்.

இவற்றில் மசியல், பொரியல், துவையல், சூப் செய்து சாப்பிட்டால் கல்லீரல் புத்துணர்ச்சி பெறும்; கல்லீரலில் படிந்த கொழுப்பும், நஞ்சுகளும் நீங்கும். பசியும், செரிமானமும் இயல்பாகும்.