எலும்பு வலுப்பெற... ராகி இட்லி ரெசிபி இதோ !
இன்றைய பரபரப்பான உலகில் குறைந்த வயதிலேயே பலருக்கும் எலும்பு தேய்மான பிரச்னை வருவது சாதாரண ஒன்றாக உள்ளது. சத்தான உணவு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பை தவிர்க்கலாம்.
எனவே, இதுபோன்ற பிரச்னையிலிருந்து பாதுகாத்து கொள்ளவும், கால்சியம் சத்து குறையாமல் இருக்கவும் ராகி இட்லி அடிக்கடி செய்து சாப்பிடலாம். இதோ ரெசிபி...
ராகி - ஒரு கப், உளுந்து - அரை கப், இட்லி அரிசி - அரை கப், வெந்தயம் - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
ராகி அல்லது கேழ்வரகு எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின், உளுந்து, இட்லி அரிசி, வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அலசி தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் நன்றாக மாவு பதத்துக்கு அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க வைத்தால், ராகி இட்லி மாவு ரெடி.
பின்னர் இட்லி பாத்திரத்தில் எப்பொழுதும் போல அவித்து எடுக்கலாம்.
சாதாரணமான இட்லி என்றால் ஆவியில் வேக வைக்க 10 நிமிடம் ஆகும். ஆனால் ராகி இட்லியை 15 நிமிடங்களுக்கு நன்கு அவித்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மிருதுவாக இருக்கும்.
இதில் தோசையும் வார்க்கலாம். கூடுதல் சுவைக்கு சிறிது நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லி இலைகளை தூவி தோசை வார்க்கும் போது, குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவர்.