கிறிஸ்துமஸ் கேக் வரலாறு...
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, கேக் உணவு பிரதானம். அது உருவான வரலாறை பார்ப்போம்...
மாவு கலவையால் செய்யப்பட்ட உணவை ஐரோப்பியர், 'கேகே' என்பர்; இந்த சொல்லில் இருந்து, 'கேக்' தோன்றியது. கிரேக்கர்கள், 'பிளேகஸ்' என்றனர். அதற்கு தட்டை வடிவ மாவுபொருள் என அர்த்தம்.
மென்மையாக அரைக்கப்பட்ட, கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது, கேக். பழங்காலத்தில் செல்வந்தர் வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடக்கும் உபவாச நிகழ்வின் போது, எளிதில் ஜீரணமாகும் உணவான ஓட்ஸ் தானிய கஞ்சியை தயாரித்து வழங்கும் வழக்கம் இருந்தது.
அந்த கஞ்சியில், உலர் திராட்சை, முந்திரி போன்ற சுவைமிகு பொருட்களை சேர்த்தனர். பின் அதற்கு பதிலாக, கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் முட்டை கலந்து உணவு செய்யும் வழக்கம் உருவானது.
இதை பொது நிகழ்வுகளில் பரிமாறும் வழக்கம், 16ம் நுாற்றாண்டில் துவங்கியது. செல்வந்தர்கள் வீட்டில், ஆரஞ்சு, திராட்சை, பாதாம் பயன்படுத்தி சிறப்பு கேக் செய்தனர்.
கிறிஸ்துமஸ் என்றாலே, பழங்களால் தயாரிக்கும், 'ப்ளம் கேக்' தான் பிரபலம்; பண்டிகைக்கு முன், உலர்ந்த பழங்களை, ஒயினுடன் கலந்து, காற்று புகாமல், நொதிக்க வைத்து, கேக் செய்யப்பட்டது.