வெயிலில் எப்போதும் பணிபுரிபவர்கள் உடல் நலனை பாதுகாப்பது எப்படி?
வெயில் காலங்களில் வெளிப்புறங்களில் பயணம் செய்யும் போது, சராசரியாக வெளியேறும் வியர்வையை விட 3 - 4 மடங்கு வியர்வை வெளியேறும்.
உடலின் மையப்பகுதி சூடாகும் போது உடலைக் குளிர்விக்கும் பொருட்டு வியர்வை வெளியேறுகிறது. இதற்காக, உடல் முழுவதும் நமது சருமத்தில் வியர்வை சுரப்பிகள் உள்ளன.
வியர்வையில் நீர் மட்டும் வெளியாவதில்லை. அதனுடன் சோடியம், பொட்டாசியம் போன்ற முக்கிய தாது உப்புகளும் வெளியேறுகின்றன.
தொடர்ந்து அதிகளவு வியர்வை வெளியேறும் போது, ரத்தத்தின் மொத்த நீர்ச்சத்து அளவு குறையும். இதனால், ரத்த நாளங்களுக்குள்ளேயே ரத்த உறைதல் நிகழ்வு துாண்டப்படலாம்.
அதீத உடல் உழைப்பு, வெயில் காலங்களில், அதீத வியர்வை ஏற்படும் போது பொட்டாசியம் அளவு குறைந்து 'ஹைப்போ கலீமியா' எனும் நிலையில் இதயம் தறிகெட்டுத் துடிக்க ஆரம்பிக்கும்.
இதன் விளைவாக இதய செயல் முடக்க நிலை ஏற்படலாம்.
ரத்தத்தில் ஏற்கனவே சோடியம் குறைவாக இருக்கும் நேரத்தில், மிக அதிகளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடித்தால் ரத்தத்தின் சோடியம் அளவு இன்னும் அபாய அளவில் குறைந்து விடும்.
இதன் விளைவாக வலிப்பு, மூளையில் வீக்கம், கோமா மற்றும் மரணம் வரை ஏற்படலாம்.
ஒரே நேரத்தில் அதிகமான அளவு நீரை அருந்தக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரை அருந்த வேண்டும்.
வெயில் உச்சத்தில் இருக்கும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.