அழுக்கு சாக்ஸ் உங்களின் பாதங்களை எவ்வாறு பாதிக்கிறது?

இன்றைய பரபரப்பான உலகில் தினமும் அலுவலகத்துக்கு ஷூ அணிந்து செல்லும் பலரும், துவைக்காத சாக்ஸை அணிந்து அதன் மீது ஷூ அணிந்து செல்வர். இது தவறான ஒன்றாகும்.

ஷூக்களின் உட்பாகம் பாதங்களை பாதிக்காமலும், கால்களை உறுத்தாமலும் இருக்க சாக்ஸ் பயன்படுகிறது. இவற்றை தினமும் துவைத்து வெயிலில் காய வைத்து உலர்ந்த பின் மீண்டும் அணிவதே ஆரோக்கியமானது.

சாக்ஸ் அணிந்த சில மணி நேரங்களில் ஈரம் படிவதால், கெட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்கள் பெருகத் துவங்கும். துவைக்காமல் மீண்டும் அணிவதால் ஓவ்வாமை, அரிப்பு, சிறு கொப்புளம் ஏற்படும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் இறுக்கமாக சாக்ஸ் அணிவர். இது தவறு. இது கால்களில் ரத்தவோட்டத்தை பாதிக்கும்.

விளையாட்டு வீரர்களின் சாக்ஸில் மண் துகள்கள் உள்ளே செல்ல அதிக வாய்ப்புள்ளது. இது காலில் சிறு கொப்புளங்களை ஏற்படுத்தும். எனவே, வீட்டுக்கு வந்ததும் சாக்ஸை நன்கு உதறி துவைப்பது அவசியம்.

வெரூகா பிளாண்டாரிஸ் என்ற வைரஸ் அழுக்கு சாக்ஸ் மூலம் காலில் பரவும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதை தொடர்ந்து அணிய காலிலுள்ள காயம், புண் வழியாக வைரஸ் ரத்தத்தில் கலந்து பாதிப்பு ஏற்படும்.

இந்தியா, ஆப்ரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் மிக கனமாக சாக்ஸ் அணிவது தவறு. இதனால் வியர்வை சுரப்பிகள் பாதிப்படையும். மிருதுவான காட்டன் சாக்ஸ் அணிவதே நல்லது.

முடிந்தவரை சாக்ஸ் அணிந்து வீட்டுக்குள் வருவது, மண் தரையில் நடப்பது போன்ற செயல்களைத் தவிருங்கள். இது உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.