மனம் பாதித்தால் உடல் நலம் எவ்வாறு பாதிக்கும்?
மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றில் என்ன நடந்தாலும் அது மற்றொன்றைப் பாதிக்கிறது.
மன அழுத்தத்தில் இருக்கும்போது, பதற்றமாக, சோர்வாக உணரும்போது, அது உடலில் எதிர் மறையான உணர்வுகளைத் துாண்டுகிறது.
இதயம் வேகமாக துடிக்கிறது, மூச்சு இரைக்கிறது, தசைகள் இறுக்கமடைகின்றன, சக்தி இல்லாமல் போய்விட்டதாக உணர்கிறோம்.
இது, உடல் சவால்களை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தும் ஒரு வழியாகும். மன அழுத்தம், கவலை போன்றவை சிறிது நேரம் இருந்தால் அதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.
அதேசமயம் அவை நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அட்ரினலின், கார்டிசால் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் ரத்தத்தில் தேங்கி, உடல் பதற்றமாகவே இருக்கும்.
உடற்பயிற்சி செய்யும் போது, எண்டோர்பின்கள் உட்பட நல்ல ரசாயனங்கள் வெளிப்படும். இவை மூளைக்கு, 'நாம் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம்' என்ற சமிஞ்கைகளை அனுப்புகின்றன.
இதனால், இதயத் துடிப்பு சீராகிறது. சுவாசம் இயல்பாகிறது. பதற்றம், தசைகளில் உள்ள இறுக்கம் குறைந்து, சகஜ நிலைக்கு வருகின்றன.
மூளைக்கு ரத்த ஓட்டம் மேம்படுகிறது, ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் ரத்தம் வழியாக உடல் உறுப்புகளுக்குச் சென்று, நிதானமாக சிந்திக்க, செயல்பட முடிகிறது.